தமிழ்நாடு அரசு, ஏல சொத்துக்களுக்கான பதிவு கட்டணத்தை 4% இல் இருந்து 2% ஆக குறைத்துள்ளது. இது ஏலத்தில் சொத்து வாங்குவோருக்கு நிதிச்சுமையைக் குறைத்து, சொத்து உரிமைப் பதிவை எளிதாக்கும்.
Tamilandu Registration fee reduction : தமிழ்நாடு அரசு, ஏலம் மூலம் வாங்கப்படும் சொத்துகளுக்கான பதிவு கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால் வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போன சொத்துகளை ஏலத்தில் வாங்குபவர்கள், குறைந்த கட்டணத்தில் பதிவு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வங்கிக் கடனுக்கு அடமானமாக வைத்திருந்த சொத்துக்கள், உரிமையாளர்கள் தவணைகளை செலுத்த தவறினால், வங்கி அந்த சொத்துகளை ஏலம் விடும் அந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள், விற்பனை சான்றிதழ் மூலம் சொத்து உரிமையைப் பெறுகின்றனர். இந்த சான்றிதழை பத்திரப்பதிவு செய்யும் போது, முந்தைய நிலைப்படி 4% பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஏல சொத்துக்களுக்கான பதிவு கட்டணம் குறைப்பு
இந்த 4% கட்டணம், ஏலத்தில் சொத்து வாங்கும் நபர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தி வந்தது. இதனை குறைக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனையேற்ற தமிழக அரசு தற்போது பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைத்து அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ஏலம் வாங்குபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை பெறுவார்கள். அந்த வகையில், பதிவு கட்டணச் செலவு குறையும், சொத்து உரிமைப் பதிவு செயல்முறை சுமுகமாகும், குறைந்த முதலீட்டில் சொத்து உரிமை உறுதி செய்யப்படும்.
பத்திர பதிவு கட்டம் குறைப்பு - மக்கள் கொண்டாட்டம்
இந்த சலுகை உடனடியாக அமலில் வராது. பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியான நாளிலிருந்து இது சட்டபூர்வமாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நடவடிக்கை, வீடு, வணிக வளாகம் போன்ற சொத்துகளை ஏலம் மூலம் வாங்கும் சாதாரண மக்களுக்கு, முதலீட்டுச் செலவில் தள்ளுபடி அளிக்கும்.
குறிப்பாக, வங்கிக் கடன்களில் இடறிய சொத்துக்களை மீள்நிறைவு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது மிகுந்த நிவாரணமாக இருக்கும். தமிழ்நாடு அரசின் இந்த புதிய அரசாணை, பொருளாதார நெருக்கடியில் சிக்கிய சொத்துக்களுக்கு நியாயமான விலை மற்றும் எளிய பதிவு கட்டணத்தின் வாயிலாக புதிய உரிமையாளர்களை ஆதரிக்கும் ஒரு முன்னோடி நடவடிக்கையாக காணப்படுகிறது.
