Asianet News TamilAsianet News Tamil

நீதிமன்ற வளாகத்திலேயே வக்கீலை புரட்டி எடுத்த மதிமுக-வினர்; வைகோவை தவறாக பேசியதால் ஆத்திரம்...

MDMk members attacked lawyer in court premises because of vaiko insulted
MDMk members attacked lawyer in court premises because of vaiko insulted
Author
First Published Jul 7, 2018, 6:56 AM IST


தூத்துக்குடி 

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வைகோவை தவறாக பேசியதாக வக்கீல் ஒருவரை ம.தி.மு.க.வினர் சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் கடந்த 28–2–2009 அன்று, புதிதாக அனல் மின்நிலையம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி வருகைத் தந்தார். 

அவரைக் கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மத்திய பாகம் காவலாளார்கள்,  மத்திய மந்திரியின் வருகையை தடுக்கும் நோக்கத்தோடு அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், சதித்திட்டம் தீட்டுதல், தலைவர்களின் உருவப்படத்தை செருப்பால் அடித்தல், தீவைத்து கொளுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக தலைவர்களை அவதூறாக பேசியது என வைகோ உள்பட 159 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வந்தார். 

அவர் நீதிமன்றம் உள்ளே செல்லும்போது, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் அருகே வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்த சில வழக்குரைஞர்கள், வைகோவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் வைகோ 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு பிஸ்மிதா முன்னிலையில் ஆஜரானார். அப்போது அவர் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வருகிற 12–ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார். அதன்பிறகு வைகோ மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு வெளியே வந்தனர். 

நீதிமன்ற வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்த வழக்குரைஞர்கள் சிலர் சத்தம் போட்டனர். அப்போது ஒரு வழக்குரைஞர் வைகோவை தரக்குறைவாக பேசினாராம். 

இதனால் ஆத்திரம் அடைந்த ம.தி.மு.க.வினர் 15–க்கும் மேற்பட்டோர் கத்திக்கொண்டே ஓடிப்போய் அந்த வழக்குரைஞர்களை துரத்தினர். இதில் அங்கிருந்த வழக்குரைஞர்கள் வேகமாக வெளியேறி சென்றுவிட்டனர். 

ஆனால், அங்கு ஒரு வழக்குரைஞர் மட்டும் சிக்கிக் கொண்டார். அந்த வழக்குரைஞரை ம.தி.மு.க.வினர் சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் தங்ககிருஷ்ணன் தலைமையிலான காவலாளர்கள் விரைந்து வந்து அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் கலவரம் போன்று காட்சி அளித்தது. 

நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தென்பாகம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios