தமிழகம்- புதுச்சேரி எல்லையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் உள்ளன. புதுவையில் இருந்து இரு மாவட்டங்கள் வழியாகவே சாராயம், மதுபாட்டில்கள் கடத்திச் சென்று தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 

இதனை தடுக்க எல்லையில் சோதனைச்சாவடிகள் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு மதுகடத்தலில் ஈடுபடுவோர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மதுகடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக ரகசிய தகல் கிடைத்தது. இதனிடையே கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் லதா, அந்த காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மது கடத்தலுக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு  எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுவிலக்கு வழக்கில் ஒருவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம்  பெண் இன்ஸ்பெக்டர் லதாவும், ஏட்டு பாலசுப்பிரமணியனும் பணம் வாங்கிக் கொண்டு வழக்கு போடாமல் விடுவித்துள்ளனர்.

இதுபோன்று புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை பிடிக்காமல் சாராய கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர். இதுபோன்று அடுத்தடுத்து அவர்கள் மீது புகார்கள் வந்தது. இது டிஐஜி கவனத்துககு சென்றதன் பேரில் அவர்கள் இருவரையும் டிஐஜி சந்தோஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.