11 ஆயிரம் ஏக்கரில் முதல்முறையாக தமிழகத்தில் ”தேவாங்கு சரணாலயம்”.. எங்கு வரப்போகுது..? அறிவிப்பு
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டு அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 11,806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், (IUCN) தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க இயலும்.
அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் படிக்க:ஹாப்பி நியூஸ்.. மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்.. என்னென்ன ஸ்பெஷல் அம்சங்கள் ..?
இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, “இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.
மேற்படி அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 (மத்திய சட்டம் 53 இன் 1972) பிரிவு 26(A) (1) (1)ன் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் (ஏழு பிளாக்குகளில்) பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைத்து தமிழ்நாடு அரசு இன்று அறிவிக்கை செய்துள்ளது.
மேலும் படிக்க:Tamilnadu Government holidays 2023 : தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு
அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
* பாக் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம்
* விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி பறவைகள் சரணாலயம்
* அகத்தியர் மலை யானைகள் பாதுகாப்பகம்
* திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம்
*பதிமூன்று ஈர நிலப்பகுதிகளை ராம்சார் சாசனப் பகுதிகள் பட்டியலில் இடம் பெற்றமை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:சென்னையில் கிராம உதவியாளர் பணி.. 5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..