விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
கட்சிக்காரர்களுடன் நீங்களே நேரடியாக பேசுங்கள் அண்ணே’’ என்று உரிமையாக சொன்ன விஜய், கட்சி விவகாரங்களில் புஸ்ஸி ஆனந்தின் தலையீட்டை விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.

விஜய் செங்கோட்டையனை ‘நம்பிக்கைக்குரிய மூத்த அரசியல்வாதி’ என்றே குறிப்பிடுகிறாராம். செங்கோட்டையன் மீது பெருமளவு நம்பிக்கை வைத்திருப்பதாகவே கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்த் போலவே விஜயின் நேரடித்தொடர்பில் இருக்கிறார் செங்கோட்டையன். இன்னும் சொல்லப்போனால் செங்கோட்டையனின் வருகைக்குப்பிறகு புஸ்ஸி ஆனந்த் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் தவெக நிர்வாகிகள்.
தவெகவில் செங்கோட்டையனின் பலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி வாரியான கள நிலவரப்படி படிப்படியாக உயர்ந்து வருகிறது என்கிறார்கள். அவரது கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும், தவெகவின் செல்வாக்கு மாவட்டம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தவெகவுக்கு கோபி தொகுதியில் சுமார் 8–10 சதவிகித வாக்குகள் மட்டுமே இருந்தன. தற்போது நடத்தப்பட்ட உள் கணிப்புகளில் தவெகவுக்கு 28–34% வரை முதன்மை வாக்கு வங்கி உருவாகியிருக்கிறது. அதிமுகவிலிருந்து பெருமளவு கட்சி நிர்வாகிகளும், காங்கிரஸ், திமுகவிலிருந்து ஓரளவு தொண்டர்களும் தவெகவில் இணைந்து வருகின்றனர். செங்கோட்டையன் வெளியேறியதால் கோபி மாவட்டத்தில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்து பல பகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது கோபி மாவட்டத்தையே தலைகீழாக மாற்றியிருக்கிறது என்றும் தற்போதைய கள நிலவரப்படி அவர் போட்டியிடும் தொகுதியில் வெற்றி வாய்ப்பு 70–80% வரை இருக்கிறது என்று தவெக உள் கணிப்புகள் கூறுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் தவெக 2–4 தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்கிறார்கள் தவெகவினர்.
இந்நிலையில், தவெகவின் செயல்பாடுகள், கட்சியின் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் பொதுமக்களிடம் பரீட்சயமாக இருக்கிறார்களா? என்பதை ஆலோசிக்க ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடந்தது. முதல் நாள் கூட்டத்துக்கு வந்த விஜய் அடுத்த நாள் கூட்டத்தை செங்கோட்டையனையே நடத்த சொல்லிவிட்டாராம். அந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் எடுத்திருக்கிற ஒரு சர்வேயில் பெரும்பாலான நிர்வாகிகள் பொதுமக்களோடு சம்பந்தமில்லாதவர்களாக இருக்கிறார்கள். நிர்வாகிகள் யாரென்றே தெரியவில்லை என ரிசல்ட் வந்து இருக்கிறது. பல மாவட்ட செயலாளர்கள் திமுகவுடனும், அதிமுகவுடனும் நெருங்கிய உறவில் இருப்பதாகவும், சிலர் திமுக, அதிமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளது.
இதை செங்கோட்டையன் விஜய் கவனத்திற்கு கொண்டு போக, ‘‘அதை எப்படி சரி செய்வது என்று பாருங்கள். கட்சிக்காரர்களுடன் நீங்களே நேரடியாக பேசுங்கள் அண்ணே’’ என்று உரிமையாக சொன்ன விஜய், கட்சி விவகாரங்களில் புஸ்ஸி ஆனந்தின் தலையீட்டை விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். தன்னுடைய கோபி பண்ணை வீட்டில் விஜய் கொடியேற்ற வேண்டும். வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்றும் விஜய்யிடம் செங்கோட்டையன் சொல்ல, தேதியை கூறுங்கள் அண்ணே... வந்துவிடுறேன்’’ என்று தான் பணியில் பதில் சொன்னாராம் விஜய்.
