டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான வைத்திலிங்கம் இன்று விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னதாக தவெகவில் இருப்பவர்கள் அனைவரும் மிகவும் இளைஞர்கள் அவர்களுக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அதனால் தான் கரூர் போன்ற துயர சம்பவங்கள் நடைபெற்றதாக அடுத்தடுத்து குற்றம் சாட்டப்பட்டது.
செங்கோட்டையனின் நீண்ட அரசியல் அனுபவம்
அப்படிப்பட்ட சூழலில் எம்ஜிஆர் காலத்து சட்டமன்ற உறுப்பினர், ஜெயலலிதாவுக்கு பிரசார பிளான் போட்டு கொடுத்தவர் என மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை அக்கட்சி உறுப்பினர்கள் மிகவும் கொண்டாடினர். குறிப்பாக அரசியல் விமர்சகர்கள் பலரும் செங்கோட்டையன் இணைப்புக்கு முன், செங்கோட்டையன் இணைப்புக்கு பின் என பிரித்து பேசும் அளவுக்கு செங்கோட்டையனின் இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
அதிமுக டூ ஓபிஎஸ் டூ தவெக...
அந்த வரிசையில் வைத்திலிங்கத்தின் இணைப்பு டெல்டா மாவட்டத்தில் தவெகவின் பலம் அதிகரிக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான இவர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து பயணித்தார். அதிமுக ஒருங்கிணைப்பு என்ற நிலைப்பாட்டில் பன்னீர்செல்வத்துடன் செயல்பட்டாலும் அது போதிய அளவு கைகொடுக்கவில்லை.
பரபரப்பை கிளப்பிய வைத்திலிங்கம்
மேலும் உடல் நலக் குறைவு காரணமக கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த இவர் அண்மையில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற தொண்டர் உரிமை மீட்பு குழுவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று வருகின்ற 15ம் தேதிக்குள் அதிமுகவை ஒன்றிணைக்கவில்லை என்றால் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும். நாங்கள் வெளியிடும் அறிவிப்பு தமிழக அரசியலையே மாற்றி அமைக்கும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் வைத்திலிங்கத்தின் இணைப்பு கவனம் ஈர்த்துள்ளது.


