புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜய் வெறும் 12 நிமிடங்களில் தனது உரையை முடித்ததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். கட்சி தொடங்கப்பட்ட பின் புதுவையில் நடைபெறு முதல் கூட்டம் என்பதால் இது அம்மாநில தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விஜய்யை பார்ப்பதற்காகவும், விஜய்யின் பேச்சை கேட்பதற்காகவும் பல்வேறு தடுப்புகளையும் மீறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாளர் ஆதவ் அர்ஜூனாவைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் பேசத் தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், “நிர்வாக ரீதியாக புதுச்சேரியும், தமிழகமும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் நம்மைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான். புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கப்படவில்லை.
மத்திய அரசு, அந்த தீர்மானத்தை கண்டுகொள்ளவதே கிடையாது. புதுவை மக்கள் திமுகவை நம்ப வேண்டாம். மத்திய அரசு, தமிழகத்தை ஒதுக்குவது போல் புதுச்சேரியை ஒதுக்கக் கூடாது. மத்திய அரசு போதுமான நிதியை வழங்க வேண்டும். விஜய் தமிழகத்திற்கு மட்டும் தான் குரல் கொடுப்பான் என நினைக்காதீர்கள் புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பேன். தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மக்களும் என்னை 30 வருடங்களாக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையிரால் சிறைபிடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும். இந்த திமுகவை நம்பாதீர்கள். அவர்களுக்கு உங்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் வேலையே” என்று பேசினார். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக என்ன திட்டங்களை விஜய் முன்வைக்கப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்த மக்களுக்கு விஜய்யின் பேச்சு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் உரையை கேட்பதற்காக அதிகாலை 5 மணி முதல் மக்கள் வெயிலில் காத்துகிடந்த நிலையில் வெறும் 12 நிமிடங்களில் விஜய் உரையை முடித்துக் கொண்டதால் கூடியிருந்தவர்கள் ஷாக்காகினர்.


