நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்ல தேவையில்லை. உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்துக்கு பெண் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு.

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். பல்வேறு கட்டுப்பாடுகளோடு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மேலும் கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்கும் 5 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்று திட்டவட்டமாக சொல்லப்பட்டது.

ஆனால் விஜய்யை பார்க்கும் முனைப்பில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள், ரசிகர்கள் கூட்டம் நடைபெறும் பகுதியில் குவிந்தனர். அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என அடையாள அட்டை இல்லாதவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில் பாஸ் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் கூட்டம் நடைபெறும் பகுதியில் குழுமியிருந்த நிலையில் அவர்களையும் உள்ளே அனுமதிக்குமாறு காவல் துறையினரிடம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் புஸ்ஸி ஆனந்தை கடுமையாக கடிந்து கொண்டார்.

Scroll to load tweet…

குறிப்பாக உங்களால் பலபேர் இறந்துவிட்டார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு நீங்கள் கட்டளையிட வேண்டாம் என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆன்நத், காவல் கண்காணிப்பாளர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் பாஸ் இல்லாத நபர்களும் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.