விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..
புதுச்சேரியின் உப்பளம் பகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று மக்கள் சந்திப்பை நடத்தும் நிலையில் சுமார் 1 கிமீ தூரத்திற்கு காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் விஜய்
தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அக்கட்சியின் தலைவர் விஜய் முதல் முறையாக இன்று புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மிகவும் கவனமாக மேற்கொள்ளும் விஜய், புதுச்சேரி மக்கள் சந்திப்பிலும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் செயல் படுகிறார். அந்த வகையில் புதுவையின் உப்பளம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5000 நபர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5000 நபர்களுக்கு மட்டும் அனுமதி
கூட்டத்தில் பங்கேற்கும் 5000 நபர்களுக்கும் கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்ற கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது. முழுக்க முழுக்க புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு கட்டுப்பாடு
கரூர் நெரிசலுக்கு பின்னர் முதல் முறையாக விஜய் திறந்த வெளியில் நின்றவாறு பேசவுள்ளார். இந்த கூட்டம் சரியாக காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், கர்ப்பிணிகள் கண்டிப்பாக பங்கேற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு சுமார் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் இருந்து சுமார் 1 கிமீ தூரத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

