புதுச்சேரியில் நாளை தவெக விஜய்யின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், புதுவை காவல்துறையினர் எமர்ஜென்சி எக்ஸிட் அமைத்து சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
புதுச்சேரியில் நாளை தவெகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்ட நிலையில், காவல்துறை பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி கொடுத்தது. புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை காலை 10.20 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கியூ ஆர் கோட் கொண்ட பாஸ் இல்லாமல் யாரும் உள்ளேவர முடியாது. தமிழகத்தில் இருந்து யாரும் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுவையில் விஜய் பொதுக்கூட்டம்
மேலும் பொதுக்கூட்டத்துக்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்றும் கர்ப்பிணிகள், முதியவர்கள் வரக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் 3 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிவறை மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தவெக சார்பில் செய்யப்பட்டுள்ளன.
உஷாராக இருக்கும் புதுவை காவல்துறை
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது என்பதால் எந்த அசாம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் புதுவை காவல்துறை உறுதியாக உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் மக்கள் அவரசமாக வெளியேறுவதற்கான எமர்ஜென்சி எக்ஸிட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுவை பெண் போலீஸ் அதிகாரி விளக்கம்
இந்த நிலையில், புதுவை பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் விஜய் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. நாளை பொதுக்கூட்டத்தில் காவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் காவலர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது? என்பது குறித்து காவலர்களுக்கு புதுவை பெண் போலீஸ் அதிகாரி விளக்கினார்.
காவலர்களுக்கு பொறுமை முக்கியம்
அப்போது பேசிய அவர், ''பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை மேனேஜ் செய்யும்போது எந்த பீதியும் இல்லாமல் அமைதியாக செயல்பட வேண்டும். ஒரு காவலர் பீதியடைந்தால் அது அனைவரையும் பாதிக்கும். ஆகவே கூட்டத்தை ஒழுங்குப்படுத்துடுத்தும்போதும், கட்டுப்படுத்தும்போதும் பொறுமையாக இருப்பது மிகவும் அவசியம். எமர்ஜென்சி எக்ஸிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
எமர்ஜென்சி எக்ஸிட்டுகளில் மிகவும் தயாராக இருக்க வேண்டும். சிறு அசாம்பாவிதம் நடந்தால் கூட மொத்த கூட்டமும் எமர்ஜென்சி எக்ஸிட்டுளை நோக்கி தான் செல்வார்கள். ஆகவே எமர்ஜென்சி எக்ஸிட்டுகளில் எப்போதும் ரெடியாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் உங்களுக்குரிய பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். தனித்தனியாக செயல்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுதான்டா போலீஸ்
காவலர்கள் மத்தியில் புதுவை பெண் போலீஸ் அதிகாரி பேசும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. புதுவை காவல்துறையினர் போல் தமிழக காவல்துறையும் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் அசம்பாவிதங்களை தடுத்திருக்க முடியும் என்று பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


