- Home
- Tamil Nadu News
- திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்..! மதுரையில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்
திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்..! மதுரையில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்
Mk Stalin Speech in Madurai: மதுரையில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பாஜக, அதிமுக கூட்டணியை கடுமையாக சாடினார்.

விடியல் பயணம் திட்டத்தில் 900 கோடி பயணங்கள்..
மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் பேசியதாவது, “அண்மையில், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பேசிய பழைய வீடியோ ஒன்று, மறுபடியும் வைரல் ஆனது! பார்த்திருப்பீர்கள். அதில் என்ன சொல்லியிருந்தார்... இலவச பேருந்து பயணத் திட்டத்தால், மெட்ரோ இரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த நாளிலிருந்து, பெண்கள், விடியல் பயணம் திட்டத்தில் இலவசமாகப் பயணிக்கிறார்கள். இதுவரைக்கும் சுமார் 900 கோடி பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு குடும்பமும், மாதா மாதம், சுமார் 800 ரூபாய் சேமிக்கிறார்கள். இதெல்லாம் ஏன் சார் உங்களுக்கு வலிக்கிறது?
பிரதமரிடம் கேளுங்கள்..
மார்ச் 1-ஆம் நாள் இதே மதுரைக்கு பிரதமர் வரப்போகிறார். அவரிடம் மதுரை மக்கள் என்ன கேட்க வேண்டும் என்றால், இவ்வளவு அக்கறையுடன் மெட்ரோ இரயிலுக்குப் பேசும் அவர், ஏன் இந்த மதுரைக்கு மெட்ரோ இரயில் திட்டத்தைக் கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டும்? கேட்பீர்களா... கோவை மெட்ரோ எங்கே என்று கேட்க வேண்டும்? ஏன் தமிழ்நாட்டிற்கு எந்தச் சிறப்புத் திட்டங்களையும் கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டும்? கீழடி அறிக்கையை ஏன் வெளியிட மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்? எய்ம்ஸ் இன்னமும் வரவில்லையே என்று கேட்க வேண்டும்? நீட் தேர்விலிருந்து ஏன் விலக்கு தர மறுக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை வஞ்சிக்க, எங்களுக்கான கல்வி நிதியை முடக்குவது நியாயமா என்று கேட்க வேண்டும்?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… இன்னும் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் மக்கள் கேட்க காத்திருக்கிறார்கள்!
துணிச்சல் இல்லாத பழனிசாமி
நியாயமாக, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கோரிக்கையாக கூட இதையெல்லாம் கேட்கத் துணிச்சல் இல்லாத துரோகியாக அவர் மாறிவிட்டார். ஆனால் நாம், பழனிசாமி மாதிரி பயந்தாங்கொள்ளி இல்லை. ஆட்சி அல்ல, பதவி அல்ல, உயிரே போனாலும் எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். என்ன, வழக்கு போடுவீர்கள்... போடுங்கள். நாங்கள் பார்க்காத மிசாவா? நாங்கள் பார்க்காத தடாவா?
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக..
இன்றைக்கு இந்திய அளவில் இருக்கும் எதிர்க்கட்சிகளிலேயே தி.மு.க.வினர் மேல்தான் பா.ஜ.க. அரசு அதிகமான ரெய்டுகள் நடத்துகிறார்கள். நம்முடைய அமைச்சர்களுக்குத்தான் அதிக அளவில் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாமா என்று பார்க்கிறார்கள்! எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் தி.மு.க.! அதனால், உங்களின் இந்த C.B.I., E.D., I.T., எந்த சித்து விளையாட்டிற்கு நாங்கள் அஞ்சமாட்டோம்! அதற்கு வேறு ஆளைப் பாருங்கள். என்ன ஆனாலும் சரி, நாங்கள் எழுந்து நிற்போம், ஒரு கை பார்ப்போம்! தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இவ்வாறு தைரியமாக நின்று போராடுகிற காரணத்தினால்தால்தான் மக்கள் நம்முடன் ஆதரவாக நிற்கிறார்கள்! அதனால்தான் சந்திக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறோம்” என்றார்.

