EPS vs Stalin: போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியா.? திமுக அரசுக்கு எதிராக களம் இறங்கிய எடப்பாடி
ஒப்பந்த அடிப்படையில் தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியை திமுக அரசின் போக்குவரத்துத் துறை கோரியுள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஒரு படியாக இருக்கும் என கூறியுள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டென்டர்கள் வரவேற்கப்படுவதாக திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அதன் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு தொழிற்சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.
போக்குவரத்து துறை - தனியார்மயம்
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய பேருந்துகள் எதையும் கொள்முதல் செய்யாமல், ஓட்டை ஒடிசலான பேருந்துகளால் ஏற்கனவே போக்குவரத்துத் துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய இந்த விடியா திமுக அரசு, போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு படியாகத் தான் தற்போது ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களை தனியார் வசம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது.
ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்திடுக
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்வதுடன், போக்குவரத்துக் கழகத்தை தனியார்வசமாக்கும் எவ்வித முயற்சியாக இருப்பினும் அதனை கைவிட்டு, முறையாக பணியமர்த்தி, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பை சீர்செய்து பொதுமக்களுக்கு பயண "சேவை"யை வழங்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.