Arrest : பிரபல பல்கலை. கழகத்தின் பெயரில் போலி கல்வி சான்றிதழ் அச்சடித்த தீட்சிதர்.!! தட்டி தூக்கிய போலீஸ்
பிரபல பல்கலைக்கழகம் பெயரில் போலி கல்வி சான்றிதழ் அச்சடித்து விநியோகம் செய்த சிதம்பரம் கோயில் தீக்ஷிதர் உள்ளிட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி கல்விச்சான்றிதழ்
பள்ளிக்கல்வி, உயர்கல்வி முடிக்காதவர்களுக்கு போலியாக பிரபல கல்லூரிகளின் பெயரில் சான்றிதழ்கள் அச்சடித்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இந்தநிலையில் சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை(18.6.2024) இரவு நேரத்தில் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு வந்த போலீசார் சான்றிதழ்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அனைத்தும் போலி சான்றிதழ்கள் என தெரியவந்தது.
5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு விற்பனை
இந்தநிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் போலியாக கல்வி சான்றிதழ் தயாரிக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், போலி சான்றிதழ் விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கேரளா பல்கலைக்கழகம், கர்நாடகா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் 5,000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீக்ஷிதர் கைது
போலி சான்றிதழ் அச்சடிக்க பயன்படுத்திய 2 கம்ப்யூட்டர்கள், லேப்டாப், பிரிண்டர் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலி சான்றிதழ் தொடர்பாக சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த தீட்சிதர் சங்கர், நாகப்பன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் யாருக்கெல்லாம் சான்றிதழ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எங்கெல்லாம் அவர்கள் பணியாற்றி வருகின்றனர் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.