அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். வரவிருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்

EPS confident that AIADMK will win 210 seats : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியாக மக்களை சென்று சந்தித்து தங்களது ஆட்சி கால சாதனைகளையும், அரசின் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரையும், எதிர்கட்சிகளை விமர்சித்தும் வருகிறது. இதை போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை சந்திப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல ஆயிரம் பேர் கூடினர்.

200 தொகுதியில் திமுக வெற்றியா.?

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தர்மபுரி அரூர் தொகுதியில் கூடியுள்ள கூட்டத்தை திரும்பி பாருங்கள் ஸ்டாலின், நீங்கள் கண்ட 200 தொகுதிகளில் வெற்றி என்ற கனவை தகர்த்து, அடுத்தாண்டு அஇஅதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்பதற்கான சாட்சி இந்த மக்கள் கூட்டம். 2021 தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின். 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 98% நிறைவேற்றியதாக பச்சைப் பொய் சொல்கிறார்கள்,

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக

கேஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கவில்லை. கல்விக் கடன் ரத்து செய்யவில்லை. ரேஷனில் சர்க்கரை கூடுதலாக கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் என்ன செய்தார்கள், ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெற்று, நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். 

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் , அஇஅதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கியும் ,திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரூர் குமரன் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும் எனவும், அரூரில் 93 ஏரிகளுக்கு தெண்பெண்ணையாற்று உபரி நீரை சென்னக்கால் திட்டம் மூலம் பெற்று தருவதற்கான கோரிக்கையும் நிச்சயம் பரிசீலிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.