மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. வைகோவின் நீண்டகால நாடாளுமன்றப் பணி மற்றும் மக்கள் பணியை துரை வைகோ சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.
வைகோவிற்கு மாநிலங்களவை எம்பி பதவி மறுப்பு - மதிமுக அதிர்ச்சி : தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து மீண்டும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
அந்த வகையில் திமுக சார்பாக 4 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பட்டியிலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் படி, வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்ட திமுக நிர்வாகி சிவலிங்கம் ஆகியோரின் பெயர்களை அறிவித்தார். மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது.
ராஜ்யசபா பதவி திமுகவிடம் கோரிக்கை வைத்த மதிமுக
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சியினர் திமுக தலைவரிடம் வலியுறுத்தி இருந்தனர். இதனை பரிசீலிப்பதாக தெரிவித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் வைகோ பெயர் இடம்பெறாதது மதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1978 ஆம் ஆண்டே 34 ஆம் வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பணியாற்றியுள்ளார்.
வைகோவின் நாடாளுமன்ற சாதனைகள்
மே 1 ஊதியத்துடன் விடுமுறை, என்.எல்.சி தனியார்மயமாக்கலை தடுத்தது, ரயில்களில் டி.டி.ஆருக்கு படிக்கை வசதி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க குரல் கொடுத்தது, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தது என பலவற்றில் பங்காற்றியவர் வைகோ என தெரிவித்தார். முதன்முதலாக நாடாளுமன்றத்தில் சென்றபோது ஹிந்தி திணிப்புக்கு எதிராக முழங்கினார். தற்பொழுது தன்னுடைய 81 வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் நேரத்திலும் கூட மும்மொழி கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராக மாநிலங்களவையில் பேசினார். பல முறை மத்திய அமைச்சர் பதவி அவரை தேடி வந்தது. அதனை வேண்டாம் என்று மறுத்தவர் தான் வைகோ என கூறினார்.
ராஜ்யசபா கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது
அந்த தலைவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. வைகோவிற்கு பதவி ஒரு பொருட்டல்ல, மக்கள் பணி எப்போதும் தொடரும் என தெரிவித்தார். திமுகவிடம் வைகோவிற்கு மாநிலங்களவை பதவி கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம்.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என திமுக தலைமை தெரிவித்தார்கள். மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் உள்ளது. தமிழ்நாட்டு நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம். தமிழ்நாட்டின் நலனுக்காக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம் என துரை வைகோ கூறினார்.
