கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு நிராகரித்ததை அடுத்து, தமிழக அரசு கடும் விமர்சனம் செய்துள்ளது. இதனையடுத்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது. ஜூன் 18 ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
Keeladi excavation dmk protest : கீழடியில் நடைபெற்ற அகழாய்வு பல்வேறு தகவல்களை வெளிக்கொண்டிருந்தது. இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் சரியான தகவல்கள் இல்லையென மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், அந்த ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.
கீழடி ஆய்வறிக்கையை நிராகரித்த பாஜக அரசு- சீறும் தமிழகம்
இதற்கு பதிலடி கொடுத்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது என விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக போராட்டத்திற்கு தேதி குறித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க.மாணவர் அணி. செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழடி என்கிற பெயரே பா.ஜ.க அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.
பாஜக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கும் திமுக
கடந்தகால அடிமை எடப்பாடி அரசும் பா.ஜ.க-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார்.
அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.