தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாகி வரும் நிலையில், திமுகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. .

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுக தலைமையில் புதிய அணி உருவாகி வருகிறது. முதற்கட்டமாக பாஜகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக அடுத்ததாக பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகளை இணைக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தூது விட்டு வருகிறது. ஆனால் இது தொடர்பாக எந்த வித பதிலும் கொடுக்காமல் தனி அணியாக செயல்பட்டு வருகிறார் சீமான்.

முழு நேர அரசியல்வாதியாக மாறிய விஜய்

மற்றொரு பக்கத்தில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் திமுகவை வீழ்த்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆலோசனை நடத்தி வருகிறார். ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் முழு நேர அரசியலில் இறங்கவுள்ளார். எனவே விரைவில் தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க களத்தில் இறங்கியுள்ளது திமுக, 200 தொகுதியை இலக்காக கொண்டு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணியை வலுப்படுத்தும் திமுக

ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டத்தை நடத்தி தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளது. மேலும் திமுக அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, மநீம, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளது. எனவே இந்த கூட்டணியை சிதறாமல் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்வரை கொண்டு செல்லும் வகையில் பணியை மேற்கொண்டுவருகிறது. இதற்காக கூட்டணி கட்சிகளோடு அவ்வப்போது பேச்சுவார்த்தையையும் நடத்தி வருகிறது. இந்த சூழலில் திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் என பல அணிகள் உள்ள நிலையில் இதனை முறியடித்து ஆட்சி பிடிக்க திமுக திட்டமிட்டுள்ளது

ஒன் டூ ஒன் - ஸ்டாலினின் அதிரடி பிளான்

இதற்காக தமிழகத்தில் 8 மண்டலங்களுக்கும் தனித்தனி நிர்வாகிகளை நியமித்துள்ளது. மேலும் திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலினும் இன்று முதல் திமுக நிர்வாகிகளோடு ஒன் டூ ஒன் மீட்டிங் நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடு, நிர்வாகிகள் செயல்பாடு, தொகுதி நிலவரம். மக்கள் மனநிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்கவுள்ளார். 

மேலும் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு அதிகம், கூட்டணி கட்சியினர் செயல்பாடு தொடர்பாகவும், யாரை எந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கலாம் எனவும் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எனவே இன்று நடைபெறும் கூட்டத்தின் போது கிளைக்கழகம் முதல் மாநில நிர்வாகம் வரை உள்ள பிரச்சனைகளை கேட்டு சரி செய்து கொள்ள திமுகவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.