பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு, அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். 

Ramadoss - Anbumani Clash: பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதாக ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம் என்று திலகபாமா தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராமதாஸை விமர்சித்த பாமக பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டுமெனக் கூறி பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் கூறியுள்ளார்.

பாமக பொருளாளர் திலகபாமா

மேலும் உடனிருந்தே கொள்ளும் நோய் இவர். அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. மாமனிதர் ராமதாஸை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று நெஞ்சிலே வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருவரையும் வீட்டுக்கு அழைத்து அன்புமணி சமாதானம் செய்து வைத்தார்.

அன்புமணி ஆதரவாளரான வடிவேல் ராவணன்

அதன்பிறகு பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் உச்சமடைந்ததை அடுத்து இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் பெருவாரியான பாமக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் புறக்கணித்தனர். ஆனால் அன்புமணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பாமக பொருளாளர் திலகபாமா, மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் புதிதாக நியமித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்நிலையில் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்: எனக்கும் செயல் தலைவருக்குமான பிரச்சனைகள் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பாமக பிரச்சனையில் சிறந்த ஆளுமைகள் 2 பேரின் சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது. பேச்சுவார்த்தை டிராவில் உள்ளது. முடிவுக்கு வரவில்லை. ராமதாஸ் கேட்டை சாத்திவிட்டு பேரன், பேத்திகளோடு விளையாடட்டும் என கூறியுள்ளார். கேட்டை சாத்திக்கொண்டு என்னால் வீட்டுக்குள் இருக்க முடியாது. தொடர்ந்து செயல்படுவேன். 43 ஆண்டுகளாக போராடி உருவாக்கிய கட்சியில் ஓரிரு ஆண்டுகள் கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு உரிமையில்லையா எனக் கேட்பதே எனக்கு அவமானம். அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் கிடைத்திருக்கும். ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி இருவரும் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனிப்பட்ட முறையில் பேசினார்கள் என்றார்.

வடிவேல் இராவணனை நீக்க முடிவு?

மேலும் பேசிய அவர் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன் என்று ராமதாஸ் கிண்டலாக கூறினார். இதனையடுத்து பாமக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் இராவணனை நீக்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.