திமுக எம்பி திருச்சி சிவா, காமராஜர் ஏசி பயன்படுத்தியதை குறிப்பிட்டு கருத்தை தெரிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் காமராஜர் ஏசி பயன்படுத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
Evidence with a photo of the AC in Kamarajar room : தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், கூட்டணியை உடைக்கும் வகையில் தற்போது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான காமராஜர் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய திருச்சி சிவா, “காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடலில் அலர்ஜி ஏற்படும்.
காமராஜருக்கு ஏசி வசதி- திருச்சி சிவா
அதனால், அவர் தங்கும் பயணியர் விடுதிகளில் குளிர்சாதன வசதி ஏற்பாடு செய்ய மறைந்த முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்,” என திருச்சி சிவா கூறினார். மேலும், காமராஜர் இறப்பதற்கு முன் கருணாநிதியிடம், “நீங்கள் தான் நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்,” என்று கூறியதாகவும் திருச்சி சிவா தனது பேச்சின் போது தெரிவித்திருந்தார்.
இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் திருச்சியில் உள்ள திருச்சி சிவா இல்லத்தை முற்றுகையிட்டனர். காமராஜரின் எளிமையான வாழ்க்கை முறைக்கு மாற்றமாக இந்த கருத்து சித்தரிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையும், “காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் திருச்சி சிவா பேசியிருப்பது வரலாற்று அறிவு இல்லாத செயல்,” என்று கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “காமராஜர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தவர். அவர் அரசு விடுதிகளில் தங்கி, வெப்பமான இடங்களில் மரத்தடியில் கட்டிலில் உறங்கியவர். ஏசி இல்லாமல் உறங்க மாட்டார் என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது. இது திமுகவின் கட்டுக்கதைகளின் தொடர்ச்சி,” என்று கடுமையாக விமர்சித்தார்.
திமுகவிற்கு எதிராக சீறும் காங்கிரஸ்
மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “காமராஜர் எளிமையின் வடிவம். ஆடம்பரங்களை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. திருச்சி சிவாவின் கருத்து அநாகரிகமானது. திமுக தலைமை இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்,” எனவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காமராஜர் ஏசி பயன்படுத்தினாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், பல்வேறு தகவல்கள் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தியது உறுதி செய்துள்ளது. காமராஜர் உதவியாளர் வைரவன் கூறிய தகவலின் அடிப்படையில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், அக்டோபர் 2ஆம் தேதி மதியம் சாப்பிட்டு காமராஜர் தூங்க சென்றிருந்தார். அப்போது அவரது அறையில் குளிர் சாதன பெட்டி இயங்கி கொண்டிருந்த போதும் காமராஜர் உடல் வியர்த்து இருந்ததாக தெரிவித்துள்ளார். இதே போல சென்னையில் உள்ள காமராஜர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி இருந்தது புகைப்படம் மூலம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை திமுகவினர் சமூகவலைதளத்தில் பரப்பி வருகிறார்கள்.
புகைப்பட ஆதாரம் வெளியிட்ட திமுக ஐடி விங்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிட்டிருந்த பதிவில், கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா. பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து,
அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


