- Home
- Tamil Nadu News
- தமிழக அரசு பஸ்கள் தான் சுந்தரா டிராவல்ஸ்..! ஸ்டாலின் எடப்பாடி இடையே வறுபடும் வடிவேல் படம்
தமிழக அரசு பஸ்கள் தான் சுந்தரா டிராவல்ஸ்..! ஸ்டாலின் எடப்பாடி இடையே வறுபடும் வடிவேல் படம்
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தை சுந்தரா டிராவல்ஸ் பேருந்துடன் ஒப்பிட்டு ஸ்டாலின் விமர்சித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக அரசியலில் தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ், 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இது மலையாளத் திரைப்படமான ஈ பறக்கும் தளிகா படத்தை ரீமேக்காக செய்யப்பட்டதாகும், இயக்குநர் தாஹா இயக்கிய இப்படத்தில் முரளி, ராதா, வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
சுந்தரா டிராவல்ஸ் படம் வணிக ரீதியாக மிதமான வெற்றியைப் பெற்றது, இந்த திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள், குறிப்பாக முரளி மற்றும் வடிவேலுவின் கூட்டணி, ரசிகர்களிடையே இன்றளவும் பிரபலமாக உள்ளன. இந்த படத்தில் முரளியின் தந்தையின் விபத்திற்கு இழப்பீடாகப் பெற்ற பழைய பேருந்து, பல நகைச்சுவை காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
சுந்தரா டிராவல்ஸ் பேருந்து- இபிஎஸ்- ஸ்டாலின் மோதல்
இந்த நிலையில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதும், அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்ததும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையில்,
சுந்தரா டிராவல்ஸ் படத்தை உதாரணமாகக் குறிப்பிட்டு பேசினார். "சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வருவது போல ஒரு பஸ்ஸை எடுத்துக்கொண்டு இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) கிளம்பிவிட்டார். அந்த பஸ்ஸில் இருந்து புகை வருவது போல, அவரது வாயிலிருந்து பொய்யும் அவதூறும் தான் வருகிறது" என்று நகைச்சுவையுடன் விமர்சித்தார்.
ஸ்டாலினை கிண்டல் செய்த இபிஎஸ்
இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் பொது மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களை சந்திக்கும் போது பதிலடி கொடுத்தார். நான் பஸ்ல வந்தா, சுந்தரா டிராவல்ஸ் என்கிறார் ஸ்டாலின். நான் விவசாயி. உங்களைப் போன்று கோடீஸ்வரனா? உங்க டிரஸ்ட்ல மட்டும் 8000 கோடி ரூபாய் இருக்கிறது.
நீங்க தனி விமானத்தில் போகலாம். என் நிலை இதுதான். நாட்டு நடப்பை பேசுங்க என்று சொன்னால் பஸ்ஸை பேசுகிறார். தமிழக பஸ்கள் எல்லாமே சுந்தரா டிராவல்ஸ்தான். டயர் ஒரு பக்கம் கழண்டு ஓடுது. பஸ் பிளாட்பாரத்துல போகுது. பஸ்ஸுக்குள் மழை வருது. நான் உங்களைப் போன்று போட்டோ ஷூட் ஆள் இல்லை. இது மம்பட்டி பிடிச்ச கை. உங்கள் பாதை வேறு, என் பாதை வேறு. படிப்படியாக வளர்ந்து வந்தேன். கடின உழைப்பு. எனக்கு சிபாரிசு இல்லை. உங்க அப்பா மாதிரி அடையாளத்தை வைத்து நான் வரவில்லை. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம், திமுகவில் வர முடியுமா?
"OG சுந்தரா டிராவல்ஸ் ஓனர்"
திமுகவில் குடும்ப உறுப்பினர் தான் தலைமைக்கு வர முடியும். இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருக்கிறாகள். திமுக என்பது கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி. துரைமுருகன் மூத்தவர் அதிக நாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவ. அவரை ஏன் துணை முதல்வர் ஆக்கவில்லை. உதயநிதிக்கு ஏன் கொடுத்தீங்க..? அப்படி உதயநிதி என்ன செஞ்சாரு? திமுகவில் ஜனநாயகம் கிடையாது.
2026 தேர்தலோட திமுகவுக்கு மூடுவிழாதான் என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஸ்டாலினை "OG சுந்தரா டிராவல்ஸ் ஓனர்" என்று குறிப்பிட்டு, அரசு பேருந்துகளின் மோசமான நிலையை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் இட்டுள்ளனர்.