கும்மிடிப்பூண்டியில் 10 வயது மாணவி பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது பள்ளி மாணவி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்து வந்த மாணவி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

சிசிடிவி காட்சிகளில் அதிர்ச்சி

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியை தூக்கிச் சென்றது தொடர்பான பகீர் காட்சிகள் வெளியானது. இந்நிலையில் 10 வயது சிறுமியால் நடமாட முடியாத ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகங்களில் வெளியாகி உள்ள சிறுமி கடத்தப்படும் காட்சி காண்போரை நடுங்கச் செய்கிறது; நெஞ்சைப் பதைக்கிறது.

மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா?

இந்த கொடூரக் காட்சி மு.க.ஸ்டாலின் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா? தன்னுடைய ஆட்சியில், ஒரு பத்து வயது சிறுமியால் சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லையே என்ற வேதனையாவது இந்த பொம்மை முதல்வருக்கு இருக்கிறதா? இதற்கு மேலும், "சட்டம் ஒழுங்கு சிறப்பாக தான் இருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவர் வீண் அரசியல் செய்கிறார்" என்று சொல்வார் என்றால் ஸ்டாலின் வானத்தைப் பார்த்து உமிழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்றே பொருள்.

ஸ்டாலின் மாடல் அரசு

10 வயது சிறுமியால் நடமாட முடியாத ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலின், யாருடனும் இருந்து என்ன பயன்? சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடைவதை உறுதி செய்யவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். ஆட்சி புரிவதற்கான அருகதை துளியும் இல்லாத ஒரு கட்சியிடம், பொம்மை முதல்வரிடம் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை மீட்டெடுப்பதே, தமிழகப் பெண்களைக் காக்க ஒரே வழி என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.