நீலகிரி மாவட்டம் உதகையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 3 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு உதகை சேரிங் கிராஸ் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது கோவையில் இருந்து உதகைக்கு வந்த ஒரு லாஜிஸ்டிக் ஓம்னி காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது அந்த வாகனத்தில் சுமார் 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நகைகளுக்கு உண்டான ஆவணங்களை வாகனத்தில் இருந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் கேட்டபோது எந்த ஒரு ஆவணங்களுக்கு இல்லாததால் அந்த ஆம்னி காரை உதகையில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கோவையை சார்ந்த தனியார் லாஜிஸ்டிக் நிறுவனம் தங்க நகைகளை உதகையில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உடன் கார் பிடிபட்டிருப்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. மேலும் சம்பந்தப்பட்ட தனியார் லாஜிஸ்டிக் நிறுவனத்தினருக்கு தங்க நகைகளுக்கான ஆவணங்களை வருமான வரித்துறையினரிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிடிபட்ட நகைகளுக்கான ஆவணங்களுடன் உதகையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தனியார் லாஜிஸ்டிக் நிறுவனத்தினர் சென்று இருப்பதாக கூறபடுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் சுமார் 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் 3 கோடி மதிப்பிலான தங்க நகைகளுடன் தனியார் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் கார் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.