- Home
- Tamil Nadu News
- அரசியல் முடிவில் பின்வாங்கியது ஏன்..? ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் கடும் கோபத்தில் ரஜினி பரபரப்பு அறிக்கை..
அரசியல் முடிவில் பின்வாங்கியது ஏன்..? ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் கடும் கோபத்தில் ரஜினி பரபரப்பு அறிக்கை..
திமுகவினரின் மிரட்டல் காரணமாகவே அரசியல் முடிவில் ரஜினிகாந்த் பின்வாங்கியதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

திமுக மிரட்டலால் பின்வாங்கிய ரஜினி..
தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 12ம் தேதி திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தவெக பிரசார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் போன்று தாமும் வரவேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால் திமுகவினரின் மிரட்டலால் ரஜினி தனது முடிவில் பின் வாங்கினார். ஆனால் நமது தலைவர் விஜய் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியமாட்டார். தற்போது ரஜினிகாந்த் திமுக குடும்பத்தினரின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திலேயே நடிக்க சென்றுவிட்டார்” என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.
அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வந்தனர். குறிப்பாக திமுக அமைச்சர் ரகுபதி கூறுகையில், “நடிகர் ரஜினிகாந்த் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியக்கூடிய நபர் கிடையாது. மாறாக கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்க முக்கிய காரணியாக இருந்தவர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி எங்களுக்கு நெருங்கிய நண்பர். அவரை யாரும் மிரட்டவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.
உண்மைக்கு மாறானது..
இந்நிலையில் தன்மீதான விமர்சனத்திற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள ரஜினிகாந்த், சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளப் பதிவில், “தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், வேலுமணி, அண்ணாமலை, அர்ஜூன மூர்த்தி, அன்புமணி, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், தனஞ்சயன், மற்றும் திரையுலக நண்பர்கள், நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே, ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

