சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞருக்கு வீரியமற்ற கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இது தமிழகத்தில் இரண்டாவது கொரோனா தொடர்பான உயிரிழப்பாகும்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் அடுத்துள்ள சேர்த்துக்குளி பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் ஜேசிபி வாகனம் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் தமிழரசினை மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழரசனை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது விரீயமற்ற கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட வார்ட்டில் தமிழரசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. மேலும் சிறுநீரக பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்புகளும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் இவருக்கு வீரியமற்ற கொரோனா பாதிப்பு இருந்து வந்ததாகவும் மேலும் கிட்னி பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாகவே உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
