சென்னை பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் பழக்கமான நபர் ஆபாச வீடியோக்களை அனுப்புவதாக மிரட்டி தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் மூலம் பழக்கம்
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் சரவணன் விக்ரம் என்பவருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக பழகி வாட்ஸ்அப் நம்பரை வாங்கிக் கொண்ட சரவணன் விக்ரம் அதன் பின்னர் அந்த பெண்ணிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். அந்த பெண்ணையும் ஆபாசமாக வீடியோ காலில் வருமாறு கூறிவந்துள்ளார்.
ஆபாச வீடியோக்களை அனுப்புவதாக மிரட்டல்
இருவரும் இவ்வாறு பழகி வந்த நிலையில் தனக்கு இரண்டு மகள்கள் இருப்பதால் சரவணன் விக்ரம் உடனே பழக்கத்தை நிறுத்த அந்த பெண் முடிவு செய்துள்ளார். இதனால் தனது போன் நம்பரை அந்த பெண் மாற்றம் செய்துவிட்டு சரவணன் விக்ரம் உடனான சமூக வலைதள பழக்கத்தை துண்டித்துள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த பெண்ணின் அக்காவின் பேஸ்புக் பக்கத்தை கண்டுபிடித்த சரவணன் விக்ரம், உங்கள் தங்கையின் ஆபாச வீடியோக்களை அனுப்பி விடுவேன் என்னை மிரட்டி போன் நம்பரை வாங்கி உள்ளார்.
சென்னை சைபர் காவல் துறையில் புகார்
தற்போது மீண்டும் அந்த பெண்ணிடம் போனில் பேசியும் வாட்ஸ்அப் காலில் வந்தும் ஆபாச தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் சென்னை சைபர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த கோபி (42) என்பவரை கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
போலீசார் விசாரணையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பல இன்ஸ்டாகிராம் பேஸ்புக் ஐடிகள் மூலம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்த போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
