கொலைக்குற்றவாளிகளை,தீவிரவாதிகளை, படு பயங்கர ரவுடிகளைப் பிடிப்பதை விட அதிக மூர்க்கத்தனமாக சென்னை டிராஃபிக் போலீஸார் ஹெல்மெட் அணியாதவர்களை சுற்றி வளைத்துப் பிடித்துவரும் வகையில் சென்னையில்  நேற்று ஒரே நாளில் மட்டும்  ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்கள் மீது 20 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தலைக்கவசம் அணியாமல் பயணித்ததாக சென்னையில் ஒரே நாளில் 20 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 20 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

முன்பெல்லாம் சிக்னல்களைக் கடந்து வந்தவுடன் அல்லது தனியாக சிக்கும்போது டிராஃபிக் போலீஸார் ஹெல்மெட் அணியாதவர்களை மடக்குவார்கள். ஆனால் நேற்று சிக்னலில் நிற்பவர்கள், நல்ல வாகன நெரிசல்களுக்கு மத்தியில் நிற்பவர்களைக் கூட உள்ளே புகுந்து சாவியைப் பிடுங்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களும் காவலர்களின் அந்த வேட்டைக்குத் தப்பவில்லை.