தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் சென்ற தனியார் பேருந்து ஒன்று திம்பம் மலைப்பாதையில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து அங்குள்ள மரத்தில் சிக்கி தொங்கிய வண்ணம் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையானது ஆபத்தான 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழகம் - கர்நாடக எல்லைப் பகுதிகளை இணைக்கும் முக்கிய பாதையாக இருந்து வருகிறது. இந்த பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் 3-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. 

இந்த நிலையில், நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஈரோட்டிற்கு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது.  திம்பம் மலைப்பாதையின் 25-வது கொண்டை ஊசி வளையில் பேருந்து திரும்பியபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மலைப்பாதையில் உருண்டு விழுந்த பேருந்து, மரத்தில் சிக்கி தொங்கிக் கொண்டுள்ளது.

பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்ததில் இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படுகாயமடைந்த 22 பேர் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.