பாலக்காடு மக்களவை தொகுதி: சிபிஎம், காங்கிரஸை அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கும் பாஜக?
கேரள மாநிலத்தின் பாலக்காடு மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வளர்ச்சி சிபிஎம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது
பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இருப்பினும், அம்மாநிலத்தில் தனது வாக்கு சதவீதத்தை பல இடங்களில் பாஜக அதிகரித்துள்ளது. ஆனாலும், அக்கட்சிக்கு கேரளாவில் ஒரு எம்.பி. கூட கிடையாது. இதனிடையே, மக்களவைத் தேர்தல் 2024இல் கேரள மாநிலத்தில் சில தொகுதிகள் பாஜகவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. அதில் ஒன்று பாலக்காடு தொகுதி.
கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாலக்காடு தொகுதியை பொறுத்தவரை ஆளும் சிபிஎம் மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதி கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வி.கே.ஸ்ரீகண்டன் அந்த தொகுதியில் வெற்றி பெற்று, ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 இடங்களில் வெற்றி பெற்றது.
இதுஒருபுறமிருக்க, பாலக்காடு தொகுதியில் பாஜகவும் வளர்ந்து வருகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 52 உறுப்பினர்களைக் கொண்ட பாலக்காடு நகராட்சியில் 28 கவுன்சிலர் இடங்களை பாஜக கைப்பற்றியது. கடந்த மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் 21 சதவீதம் வாக்குகளை பாஜக பெற்றது. வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வி.கே.ஸ்ரீகண்டன் 39 சதவீத வாக்குகளையும், சிபிஎம் வேட்பாளர் எம்.பி.ராஜேஷ் 38 சதவீத வாக்குகளையும் பெற்றார். எனவே, இந்த முறை பாஜக தனது வாக்கு சதவீதத்தை 15-20 சதவீதம் உயர்த்தினாலே அந்த தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இது கடினம்தான் என்றாலும், சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது.
Fact Check பிரதமர் மோடிக்கு மட்டும் ஆதரவளிக்கும் கர்நாடக வாக்காளர்கள்?
இந்த முறை ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் சிபிஎம் சார்பில் விஜயராகவன் வேட்பாளாராக நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக சார்பாக 2019 தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமாரே மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் வி.கே.ஸ்ரீகண்டன் மீண்டும் களம் காண்கிறார். இதனால், பாலக்காடு தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
கொரோனா தொற்று நோயை திறம்பட எதிர்கொண்டது, மாநில அரசின் நலத்திட்டங்களை கூறி இடது ஜனநாயக முன்னணி வாக்கு சேகரித்து வரும் நிலையில், 2014இல் 15 சதவீதமாக இருந்து 2019 தேர்தலில் 21 சதவீதமாக அதிகரித்த வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரிக்க பாஜக வேட்பாளர் கீழ்மட்ட அளவில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மோடியின் கியாரண்டி இந்த முறை கைகொடுக்கும் என அவர் நம்புவதாக தெரிகிறது. அதேசமயம், சிட்டிங் காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீகண்டன், தனது செயல்பாட்டின் அடிப்படையில், அந்த இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள முனைப்பு காட்டி வருகிறார்.
பாலக்காடு நாடாளுமன்றத் தொகுதியானது பாலக்காடு, பட்டாம்பி, ஷோரனூர், ஒட்டப்பாலம், கோங்காடு (SC), மன்னார்க்காடு மற்றும் மலம்புழா ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடகியது. 13 லட்சம் வாக்காளர் உள்ள இந்த தொகுதியில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், CPI(M) ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்து இடங்களைக் கைப்பற்றியது. ஜனசங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை வலுவாக இயங்கியது இந்த தொகுதியில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுயுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.