காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பிரசித்தி பெற்ற வைபவமான அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த 1979-இல் நடந்தது.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து  காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் தினமும் ஒரு பட்டாடையில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். இதனால்  கூட்டம் அலைமோதியது. 18 ஆவது நாள் வைபவமான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடையில் அருள்பாலித்தார். இன்று ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர்.

லட்சக்கணக்கானோர் திரண்டதால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு  முந்திக் கொண்டு செல்ல முயன்றதால் கூட்ட நெரிசலில் ஏராளமானோர் சிக்கினர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த நாராயணி ,  நடராஜன்  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த   கங்காலட்சுமி , சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் மயக்கமடைந்த பலர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.