உள்துறை அமைச்சர் அமித்ஷா போலி வீடியோ விவகாரம்: அருண் ரெட்டி கைது!
உள்துறை அமைச்சர் அமித்ஷா போலி வீடியோ விவகாரம் தொடர்பாக அருண் ரெட்டி என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த மாதம் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த பாஜகவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்ததும், சட்டத்துக்கு புறம்பாக தெலங்கானாவில் உள்ள முஸ்லீம் இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்றும், அதற்கு பதில், எஸ்சி, எஸ்டி, ஓ.பி.சி.க்களுக்கு அந்த இடஒதுக்கீட்டை திரும்ப வழங்குவோம் என்று பேசி இருந்தார்.
ஆனால், அமித் ஷா பேசிய வீடியோ மார்பிங் செய்து, எஸ்சி, எஸ்டி, ஒ.பி.சி.க்களுக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என அமித் ஷா கூறியதாக போலி வீடியோக்களை சிலர் வெளியிட்டனர். இந்த மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோவை தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூட தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், போலி வீடியோ குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஏப்ரல் 28ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மன் செல்லும் சிறப்பு புலனாய்வு குழு!
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா போலி வீடியோ விவகாரம் தொடர்பாக அருண் ரெட்டி என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா மார்பிங் செய்யப்பட்ட வீடியோ வழக்கில், 'ஸ்பிரிட் ஆஃப் காங்கிரஸ்' எக்ஸ் கணக்கை கையாளும் அருண் ரெட்டியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அமித் ஷாவின் டீப் - ஃபேக் வீடியோ வழக்கு தொடர்பாக தெலங்கானா முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி உள்பட அம்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேருக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியது. இதுகுறித்து டெல்லி காவல்துறையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி சார்பாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.