பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மன் செல்லும் சிறப்பு புலனாய்வு குழு!
ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மன் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது பாலியல் லீலைகள் அடங்கிய 2976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் தொடர்பான பாலியல் வீடியோ பரவத் தொடங்கிய நிலையில், கர்நாடக மாநில மக்களவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்களித்து விட்டு உடனடியாக அவர் ஜெர்மன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பிரஜ்வல் ரேவண்ணாவை நாடு கடத்தி உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, விசாரணை மேற்கொள்வதற்காக, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தியுள்ள சித்தராமையா, பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியை நாடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரு சக்கர வாகனங்களுக்கு எதற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி? மத்திய அரசு மீது ராஜீவ் பஜாஜ் கடும் தாக்கு!
இந்த நிலையில், கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஜெர்மனி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்படுவது உறுதி என்கிறார்கள் இதுகுறித்த விவரம் அறிந்தவர்கள்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் துன்புறுத்தல்களில் அரசு அதிகாரிகள் முதல் சாமானியர்கள் வரை பல்வேறு பெண்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அவரது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தை மீறுதல் தொடர்பான குற்றங்களுக்காக ஐபிசி 354A, 354D, 506, மற்றும் 509 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.