கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் மனு தாக்கல்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம்தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள், பொதுமக்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக காவல் துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனிடையே கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகன், மத்திய மாநகரச் செயலாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாகக் குறிப்பிட்டு பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், “அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
