அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவர் சென்னையில் 1000 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி உள்ளார்

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.100 முதல் 160 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், தமிழக அரசு பண்ணை பசுமை கடை, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவர் சென்னையில் 1000 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி உள்ளார். சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெரு பகுதியில், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் இலவசமாக தக்காளி வழங்கினார். அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள், முதியோர் என நூற்றுக்கணக்கான மக்கள் தக்காளியை இலவசமாக வாங்கி சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் ” ஆர்.கே. நகர் தொகுதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி. எப்போதெல்லாம், மக்களுக்கு பாதிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவது தான் அதிமுக. அந்த வகையில் 38-வது வட்டத்தில் 500 கிலோ தக்காளியை 500 குடும்பங்களுக்கு வழங்கி உள்ளோம். 42-வது வட்டத்தில் 1000 கிலோ தக்காளியை 1000 குடும்பங்களுக்கு வழங்கி உள்ளோம்.

இதனை நாங்கள் விளம்பரத்திற்காக செய்யவில்லை. கடமை உணர்வோடு செய்கிறோம். திமுக ஆட்சிக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்ட உள்ளனர். கொரோனா காலத்தில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்ட போது அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்கு குறைந்த விலை வெங்காயம் வழங்கினோம். மளிகை பொருட்கள், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த தவறிவிட்டது. விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அப்போது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

திருடர்களின் டார்கெட் இப்ப தக்காளி தான்.. அடுத்தடுத்து நடந்த தக்காளி திருட்டு சம்பவங்கள்