திருப்பரங்குன்றம் மலையில் பாஜகவினர் தீபம் ஏற்ற முயன்றது அரசியல் இலாபத்துக்காகவும், மோதலை உருவாக்கவும் செய்யப்பட்ட மாபெரும் சூழ்ச்சி என குற்றம் சாட்டியுள்ளார். ஆன்மீகத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட பாஜக முயற்சி.
அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழர் நாட்டில், புனிதமான இடத்தைக்கூட அரசியல் இலாபத்துக்காகவும், மோதலை உருவாக்கவும் முயற்சித்ததன் பின்னணியில் பாஜகவின் மாபெரும் சூழ்ச்சி வெளிப்பட்டுள்ளது என வேல்முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக வாழ்வரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருப்பரங்குன்றம், இது தமிழர் பாரம்பரியம், ஆன்மீக அமைதி ஆகியவற்றுக்குரியப் புனித மலை. அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழர் நாட்டில், புனிதமான இடத்தைக்கூட அரசியல் இலாபத்துக்காகவும், மோதலை உருவாக்கவும் முயற்சித்ததன் பின்னணியில், பாஜகவின் மாபெரும் சூழ்ச்சி வெளிப்பட்டுள்ளது. ஆன்மீகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் உள்ள அரசியலைக் கைப்பற்றவே இப்படியான ஆன்மீக வழிபாடுகளிலும் மோதல் போக்கை உருவாக்க நினைக்கிறது பாஜக.
பாஜகவின் வழக்கமான சதிகார அரசியல்
மலை உச்சியில் வழக்கத்துக்கு மாறான முறையில் தீபம் ஏற்ற முயற்சி செய்ததும், பக்தி நடத்தை எனப் பெயரிட்டு, உண்மையில் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பாஜகவின் துணை அமைப்புக் குழுக்கள் செயல்பட்டதும், மக்கள் அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் நேரடியான அச்சுறுத்தலாகும். இது பக்தி அல்ல, இது ஆன்மீகம் அல்ல. இது பாஜகவின் வழக்கமான சதிகார அரசியல். அதுவும், தமிழ்நாட்டைக் கலவர மேடையாக்கும் நோக்கத்துடன், தமிழர் ஒற்றுமையைக் குலைத்து, ஆட்சியைக் கைப்பற்றப் பார்க்கும் பாசிச அரசியல்.
பக்தி என்பது பாசிசத்துக்கான மேடை அல்ல
தமிழர்களின் புனிதத் தலங்களை, தமிழர் மரபு வழிபாட்டு முறைகளை, தமிழர் மத நல்லிணக்கத்தை எள்ளளவும் மதிக்காமல், அரசியல் இலாபத்திற்காக, இங்கே தீ மூட்டிவிட்டு, அதை "ஆன்மீக உரிமை" எனப் பெயர் மாற்றி, அரசியல் சூழ்ச்சி செய்யும் பாஜகவின் இந்த முயற்சி, தமிழர் வரலாற்றை அழிக்க நினைக்கும், நுண்ணியப் பாசிச செயல்முறையாகும். பாஜகவின் இந்த அரசியல் வேட்கைக்கு, தமிழர் ஆன்மீகம் பலியாகிவிட ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழகம் அறிவும், அகமும், ஆன்மீகமும் இணைந்த நிலம். இங்கு பக்தி என்பது பாசிசத்துக்கான மேடை அல்ல. ஆன்மீகம் என்பது அரசியல் கருவியாகும் இடமுமல்ல.
திருப்பரங்குன்றம் கலவரத்திற்கான தளம் அல்ல
திருப்பரங்குன்றத்தில் நடந்ததுள்ளது சாதாரண விவகாரம் அல்ல. அது திட்டமிட்ட அரசியல் சதி. அது தமிழர் மத வழக்கங்களுக்குள் நுழைந்து குழப்பம் உண்டாக்கும் முயற்சி அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் தமிழ்ப் பெருநிலத்தில், பாஜகவினால் ஆன்மீகப் போர்வையில் செயற்கையாக உருவாக்கப்படும் "மோதல் அரசியலை" ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. திருப்பரங்குன்றம் கலவரத்திற்கான தளம் அல்ல. அது தமிழர் ஆன்மீகத்தின் அடையாளம். எந்த ஒரு அரசியல் கட்சியும் அதன் மீது, தனித்த உரிமை கொண்டாடுவதையோ, அதை வைத்து அரசியலாக்குவதையோ, தமிழர் நிலம் ஒருபோதும் அனுமதிக்காது.
பாசிசத்துக்கு ஒருபோதும் தலை வணங்காது
தமிழக அரசியலைக் கைப்பற்ற ஆன்மீகத்தை ஆயுதமாக்கும் இந்தப் பாசிசச் சூழ்ச்சி முயற்சிகளை, மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழர் நிலம், பாசிசத்துக்கு ஒருபோதும் தலை வணங்காது. ஆன்மீகத்தை அரசியல் மோதலின் தீக்குச்சியாக மாற்ற அனுமதிக்காது. தமிழர் மரபுகளை அரசியலுக்கான கருவியாக மாற்ற முயற்சிப்பவர்கள், தமிழர் ஒற்றுமையால் தோற்கடிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.


