எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்: அடித்து ஆடும் அதிமுக ஐ.டி. விங்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை தொடர்ந்து, அக்கட்சியின் ஐடி விங் அடித்து ஆட தொடங்கியுள்ளது
சமூக வலைதளங்கள் தான் எல்லாமே என்றாகிப் போன இன்றைய காலகட்டத்தில் தேர்தல் அரசியலிலும் சமூக வலைதளங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. எனவே, அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை கையாள்வதற்கு ஐடி விங் என தனியாக ஒரு பிரிவையே ஏற்படுத்தியுள்ளனர். எதிர்வரவுள்ள 2024 தேர்தலில் சமூக வலைதளங்கள் மூலமாக பணியாற்றும் ஐடி விங்கின் பங்கு பெருமளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், அதிமுகவின் ஐ.டி. விங் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, தி.மு.க., பாஜக ஐ.டி விங்கிற்கு இணையாக செயல்பட்டு வருகிறது. அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, சமூக வலைதளங்களில் யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரீகமற்ற முறையிலோ விமர்சனம் செய்யக் கூடாது; மக்களிடையே வெறுப்பை உண்டாக்கக் கூடாது என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
திமுக கூட்டணியில் 15 மக்களவை தொகுதிகளை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு: கே.எஸ்.அழகிரி தகவல்!
அதேசமயம், தகவல் தொழில்நுட்ப பிரிவு திறமையாலும், கூர்மையாலும் எதிரிகளை வேரோடு அகற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பயிற்சி பட்டறை அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவை வீழ்த்த நினைப்போருக்கு மரண அடி கொடுக்கும் அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும்.” என்றார்.
இந்த நிலையில், #அரவக்குறிச்சி_அரவேக்காடு IS A WORD, #அரவேக்காடு_அண்ணாமலை IS A FRAUD என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தங்கள் கட்சியையும் கட்சி தலைவர்களையும் விமர்சித்ததால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக அதிமுக அறிவித்துள்ளது.
இந்த சூழலில், கடந்த சில நாட்களாக அண்ணாமலையை அதிமுகவினர் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு பாஜக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அண்ணாமலைக்கு எதிராக அதிமுக ஐடி விங் களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.