திமுக கூட்டணியில் 15 மக்களவை தொகுதிகளை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு: கே.எஸ்.அழகிரி தகவல்!
திமுக கூட்டணியில் 15 மக்களவை தொகுதிகளை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. எனவே, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல், பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.
அதேசமயம், திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி கட்சிகள் அப்படியே தொடர்கின்றன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் பேசி வருகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம் 28ஆம்தேதி காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் 15 மக்களவை தொகுதிகளை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வெற்றி வாய்ப்பு உள்ள 22 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 15 மக்களவை தொகுதிகளை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், “கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். காங்கிரஸ் கட்சியின் வெற்றி சதவீதம் 72% ஆக இருந்தது. 72% வெற்றி விகிதத்தின் மூலமாகவே காங்கிரஸ் கட்சியின் பலத்தை மதிப்பிடலாம்.” எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கம்: இதுதான் காரணம்!
நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்த அவர், மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை அளிப்பேன் என்றார். சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் போட்டியிட்டால் பிரச்சினை இருக்காது எனவும், கார்த்தி சிதம்பரம் வாய்ப்பு கேட்டால் மற்றவர்கள் கேட்க வாய்ப்புள்ளது. இதுகுறுத்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், தேனி தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, இந்த முறை, அந்த 9 தொகுதிகளுடன் சேர்த்து, கூடுதலாக 13 விருப்பத் தொகுதிகளை அளித்து அதிலிருந்து 6 தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அண்ணாமலையின் எழுச்சியை தடுக்க முடியாது: தமிழக பாஜக!
திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட தொகுதிகளை வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளாக கருதி அந்த லிஸ்ட்டை திமுகவிடன் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு திமுக எத்தனை தொகுதிகள் ஒதுக்கும் என்பது தெரியவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளது என்பதால், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளின் போது தெளிவான விவரம் வெளியாகும் என தெரிகிறது.