Road Accident: அரியலூர் அருகே அலுவலகம் சென்றுகொண்டிருந்த தபால் ஊழியரான ஜெனிபர், டாடா ஏஸ் வாகனம் மோதி நிகழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் இரு தினங்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் விபத்தில் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சன்னாவூர் மேலத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் திருமானூர் அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று காலை வழக்கம்போல் ஜெனிபர் தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் அலுவலகத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக டாடா ஏஸ் வாகனம் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜெனிபர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ஜெனிபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெனிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த ஜெனிபருக்கு இன்னும் இரு தினங்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாகவும், ஜனவரி மாதம் அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு தயாராகி வந்த இளம்பெண் விபத்தில்உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


