சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஐடி ஊழியர் ரோஷன் நாராயணன் தற்கொலை செய்துகொண்டார். திருப்பதியிலிருந்து திரும்பிய குடும்பத்தினர் அவரது உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காதில் மர்ம ஒலி கேட்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

சென்னை மேற்கு முகப்பேர் திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் ரோஷன் நாராயணன் (24). அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது பெற்றோர் மற்றும் சகோதரர் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். வீட்டில் ரோஷன் நாராயணன் மட்டுமே இருந்துள்ளனர். இதனையடுத்து திருப்பதிக்கு சென்றவர்கள் இன்று அதிகாலையில் அனைவரும் வீடு திரும்பினர்.

பின்னர் வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்த போது ரோஷன் நாராயணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அலறி கூச்சலிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரோஷன் நாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் ரோஷன் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது கடிதம் ஒன்று சிக்கியது.

அதை போலீசார் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். அதில் தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஓர் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதாகவும், சகோதரரிடம் ஏற்கனவே சண்டை போட்டதால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மேலும் தாய்- தந்தையர் தன்னை மன்னித்து விடுங்கள் என்றும் எழுதி வைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.