Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலையின் எழுச்சியை தடுக்க முடியாது: தமிழக பாஜக!

அண்ணாமலையின் எழுச்சியை தடுக்க முடியாது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் சுப்ரமணிய பிரசாத் தெரிவித்துள்ளார்

The rise of Annamalai cannot be stopped says Tamil Nadu BJP spokesperson subramanian prasad smp
Author
First Published Feb 10, 2024, 2:08 PM IST

சென்னையில் பாஜக யாத்திரைக்கு தடை விதிப்பதால் அண்ணாமலையின் எழுச்சியை தடுக்க முடியாது; மக்களவைத் தேர்தல் முடிந்ததும் அண்ணாலையின் செல்வாக்கை அனைவரும் உணர்வார்கள் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் சுப்ரமணிய பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுப்ரமணிய பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஊழல், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

தமிழகத்தின் மையப் பகுதியில், வறட்சியான குக்கிராமத்தில், எளிய குடும்பத்தில் பிறந்து, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு, லக்னோ  ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ., பிறகு ஐ.பி.எஸ். என தனது திறனால் உயர்ந்தவர் அண்ணாமலை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எஸ். பதவி இருந்தும், அதிலேயே நீடித்தால் கர்நாடக மாநில டிஜிபி, சி.பி.ஐ. டைரக்டர் போன்ற உயரிய அதிகாரமிக்க பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பிருந்தும் அதை ராஜினாமா செய்து விட்டு மக்கள் பணியாற்ற அரசியலுக்கு வந்துள்ளார் அண்ணாமலை. 

அவரது அறிவாற்றலும்,  மக்களுக்காக ஐ.பி.எஸ்., பதவியை துறந்த துணிச்சலும், 'இவர் நமக்கானவர்' என்ற நம்பிக்கையை தமிழக மக்களிடம் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான், அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆர்ப்பரித்து அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாக கொண்டாடுகின்றன்ர்.  200 சட்டப்பேரவைத் தொகுதிகளைத் தொட்டுவிட்ட, 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் அனைத்து இடங்களிலும் திரண்ட கூட்டமே இதற்கு சாட்சி. 

அவுங்க கூட கூட்டணியா? அது முதலை வாயில தலைய குடுக்குற மாதிரி - அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

பணம் கொடுத்து ஏற்பாடு செய்தாலே கூட்டம் வராத இக்காலத்தில், தன்னெழுச்சியாக அண்ணாமலைக்கு திரளும் மக்கள் திரள், ஆளும் திமுகவை மிரள வைத்துள்ளது. அதனால்தான், யாத்திரைக்கு பல்வேறு இடையூறுகளை செய்தனர். ஆனால், மக்கள் ஆதரவுடன் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 

தமிழக மக்கள் தொகையில் எட்டில் ஒருவர் சென்னை மாநகராட்சிக்குள் வசிக்கின்றனர். அனைத்து மதம், ஜாதி, இனம், மொழி, கலாசாரத்தை கொண்டவர்கள் வசிக்கின்றனர். பெரும் இளைஞர் சக்தியும், மாணவர் சக்தியும் உள்ளனர். எனவே, சென்னையில் அண்ணாமலையின் யாத்திரை நடந்தால் அவருக்கான செல்வாக்கு பல மடங்கு அதிகரிக்கும். பெரும் எழுச்சி உண்டாகும். வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சென்னை மாநகரில் அண்ணாமலை யாத்திரைக்கு திமுக அரசு தடை விதித்துள்ளது.      

அண் ணாமலை ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான், சில கிலோ மீட்டர்கள் நடந்து யாத்திரை மேற்கொண்டு வருகிறார். 200 சட்டப்பேரவைத் தொகுதி வரை எந்த பிரச்சினையும் ஏற்படாதபோது, சென்னையில் மட்டும் எப்படி பிரச்சனை ஏற்படும்? போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டிப்பாக அண்ணாமலை தவிர்த்து விடுவார். மக்கள் விரும்பும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடங்களில் மட்டுமே யாத்திரை மேற்கொள் மேற்கொண்டு வருகிறார். இனியும் அப்படித்தான் செய்வார். ஆனாலும் அண்ணாமலையின் எழுச்சியை தடுக்க நினைக்கும் திமுக அரசு, யாத்திரைக்கு தடை விதித்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.      

எத்தனை தடைகள் விதித்தாலும், எத்தனை இடையூறுகள் செய்தாலும், என்னதான் சதி திட்டங்கள் தீட்டினாலும் அண்ணாமலையின் எழுச்சி யைத் தடுக்க முடியாது.  மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்ததும் அதனை திமுக மட்டுமல்ல பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் உணர்வார்கள். எனவே, திமுக அரசு ஜனநாயகத்தை மதித்து, சட்டப்படி அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு சென்னை மாநகரில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் அனுமதி அளிக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios