நடிகர் விஜய் கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கம்: இதுதான் காரணம்!
நடிகர் விஜய்யின் தவெக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கப்பட்டுள்ளார்
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் விஜய், தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை அக்கட்சி நிர்வாகிகள் இப்போதே தொடங்கி விட்டனர். மக்கள் இயக்கமாக இருந்தபோது செயல்பட்டபடியே, பொதுமக்கள் நலன் சார்ந்து இயங்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள்: ஒப்புதல் அளிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக விஜய் உள்ளார். பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் உள்ளார். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மாவட்டந்தோறும் நிர்வாகிகள், செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜய் மக்கள் இயக்கமாக செயல்படும்போது, இருந்த மாவட்ட செயலாளர்களே பொரும்பாலும் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பில்லா ஜெகன் என்பவர் இருந்தார். இவர், திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர். திமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்த இவர், திமுகவிலேயே இணைந்து விட்டதாக தெரிகிறது. இதனால், தவெக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கப்பட்டுள்ளார். புதிய செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பில்லா ஜெகனின் சகோதரர் ஆவார்.
பில்லா ஜெகன் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும், இதுகுறித்து பலமுறை புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்தும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. திமுகவில் தற்போது இணைந்துள்ள பில்லா ஜெகன், கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.