திருச்சி மாநகர பகுதிகளில் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் பார்த்து வந்தவர் பழனிவேல். வயது 45 . இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினம் ஆகும். திருச்சியில் தங்கியிருந்த இவர் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சொந்த ஊருக்கு சென்றுவருவது வழக்கம். இன்று வார இறுதி நாளான சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல ஊருக்கு கிளம்பியுள்ளார்.

தனது இருசக்கர வாகனத்தில் பழனிவேல் சென்றுகொண்டிருந்தார். இன்று அதிகாலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக சென்று சாலையோர பள்ளத்தில் சறுக்கியது. இதில் நிலை தடுமாறி பழனிவேல் கீழே விழுந்தார். அப்போது அதே சாலையில் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்து கிடந்த பழனிவேல் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி ஏறி இறங்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பலியான பழனிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.