Fire Accident: திருவள்ளூரில் மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கொசுவத்தி; கட்டிலோடு சேர்ந்து கருகிய பரிதாபம்
திருவள்ளூர் அருகே கொசுவத்தி நெறுப்பு பட்டதில் மாற்றுத் திறனாளி ஒருவர் கட்டிலோடு சேர்ந்து எரிந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் அடுத்த அண்ணனூர் புதிய அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலா அம்மாள் (வயது 64). இவரது மகன் வேல்முருகன் (45), இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். தந்தையை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்த வேல்முருகன், நேற்று இரவு தனது அறையில் கொசுத் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால், கொசுவத்தியை ஏற்றி வைத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது இவரது பெட்ஷீட் கொசுவத்தி மீது பட்டவுடன் மல மல வென்று தீ பற்றி எரிந்தது. தீ கட்டில் முழுவதும் பரவிய நிலையில், இவரது அலறல் சத்தம் கேட்டவுடன் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த இவரது தாயார் கமலா அம்மாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து வேல்முருகனை மிட்டனர்.
90% தீக்காயங்களோடு வேல்முருகனை மீட்ட திருமுல்லைவாயில் காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து திருமுல்லைவாயல் போலீசார் வேல்முருகன் உறங்கிக் கொண்டிருந்தபோது யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது கொசுவத்தியால் தான் தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவருடைய தாயார் கமலா முதியவர் என்பதால், மாற்றுத்திறனாளியாக இருந்தும், தாயாருக்கு உதவும் வகையில் வேலை செய்து வந்தார். மகனை இழந்து வாடும் கமலா தங்களுக்கு வேறு யாரும் இல்லை எனவும் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.