திருவள்ளூரில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்த பரத் (14). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கடையிலிருந்து சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்கி வந்து குடும்பத்துடன் சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டில் தோசையையும் சிறுவன் பரத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

மூச்சு திணறல்

இந்நிலையில் நள்ளிரவில் திடீரென சிறுவனுக்கு 4 முறை வாந்தி எடுத்தது மட்டுமல்லாமல் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பெரியபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காவல்துறையினர் வழக்கு பதிவு

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியபாளையம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு ஒவ்வாமையால் சிறுவன் உயிரிழந்தாரா?

உணவு ஒவ்வாமையால் சிறுவன் உயிரிழந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் பிறகே சிறுவன் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும். இரவில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்கி சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.