ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

பெங்களூரு அணி சாம்பியன்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி கோப்பையை வென்றது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். அது மட்டுமல்லாமல் கர்நாடகா மாநிலமே தீபாவளி போல் எங்கும் வாண வேடிக்கையாக இருந்தது.

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

இதையடுத்து பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வீரர்களை காணும் ஆர்வத்தில் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என குடும்பத்தினருடன் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

இந்த சம்பவத்திற்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 உயிரிழந்த நிலையில் அவர்களது விவரம் வெளியாகியுள்ளது. இதில், ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பெண் உயிரிழப்பு

பெங்களூருவில் நடந்த ஆர்.சி.பி. வெற்றிப் பேரணியின் போது கூட்டநெரிசலில் சிக்கி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தனியார் பள்ளி தாளாளர் மூர்த்தி என்பவரின் மகள் எம்.ஆர்.காமாட்சி உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக்கு பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உடுமலைப்பேட்டை கொண்டுவரப்படுகிறது .