ஐபிஎல் 2025 பட்டத்தை வென்ற ஆர்.சி.பி அணியை கொண்டாட பெங்களூரு மைதானத்திற்கு வெளியே திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வெற்றிக் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி ஐபிஎல் 2025 பட்டத்தை வென்றதை கொண்டாடுவதற்காக கூடிய கூட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எம்.சின்னசுவாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பதாக முதற்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. இந்தத் துயரச் செய்தியின் எதிரொலியாக சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த பிரமாண்ட வெற்றிக் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிவாஜிநகரில் உள்ள பௌரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.சி.பி அணி தங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட மைதானத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மைதானத்தின் நுழைவாயிலில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்:
ஆர்.சி.பி அணியுடன் கொண்டாடும் எதிர்பார்ப்பில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புதன்கிழமை மாலை முதல் சின்னசுவாமி மைதானத்தில் திரண்டிருந்தனர். மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
சாலை வழியாகவும் மெட்ரோ ரயில்களிலும் நடந்தும் வந்த ரசிகர்கள் நகரத்தின் மத்திய பகுதியில் உள்ள ஒரே இடத்தில் கூடியதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சீராகச் செல்வதை உறுதி செய்வதில் போக்குவரத்து போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த துயர சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது இத்தகைய துயர சம்பவம் நிகழ்ந்திருப்பது பெங்களூரு ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் வருகை:
விபத்து நடந்த நிலையில், மைதானத்திற்கு வந்த வீரர்களுக்கு சிறிய அளவில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் சித்தராமையா வீரர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி 15 நிமிடத்தில் முடிவந்த பின்னர், காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு விரைந்தார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அதிகப்படியான கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் 11 பேர் நெரிசலில் சிக்கி பலியானதாகத் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் மைதானத்தில் கூடியிருப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கப்பன் பார்க் மற்றும் விதான் சவுதா நிலையங்களில் மெட்ரோ ரயில சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
