எந்த தலைவருக்கும் இவ்வளவு அதிகமான கூட்டம் வந்ததில்லை என்று தவெக மாநாட்டில் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
N. Anand's Speech At The TVK Conference: தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. சுமார் 2 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். ''உங்கள் விஜய் உங்கள் விஜய், உயிரென வரேன் நான்..'' என்று விஜய் பாடிய பாடல் பின்னணியில் ஓலிக்க தவெக தலைவர் விஜய் தவெக தொண்டர்கள் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் மேடையேறினார். மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த ரேம்ப் வாக்கில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி விஜய் கையசைததார்.
சப்தமில்லாமல் சாதனை செய்த விஜய்
இதனைத் தொடர்ந்து பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மதுரை மாநாடு வெற்றி பெற்றதாக அறிவித்தார். மாநாட்டில் பேசிய அவர் கூறுகையில், ''உலக தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வீற்றிருக்கும் வருங்கால முதல்வர் தளபதி விஜய் அவர்களே. ஓராண்டுக்கு முன்பே விக்கிரவாண்டி வி.சாலையில் முதல் மாநாடு நடத்தினோம். அன்று நம் மனதில் இருந்த எண்ணங்களை ஆசைகளை நம் தலைவரோடு பகிர்ந்து கொண்டோம். நம் தமிழர் அன்று ஒரு கட்சி அல்ல; ஒரு புரட்சியை தொடங்கினார். இன்று கோடிக்கணக்கான மக்கள் படையே இவரோடு நிற்கிறது. இதற்கு பெயர் தான் சப்தமில்லாமல் சாதனை செய்வது.
விஜய் தாய்மார்களின் செல்லப்பிள்ளை
இன்று மதுரை மண்ணில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் நிற்கிறோம். இத்தனை லட்சம் மக்களை பார்க்கும்போது ஒரே வார்த்தை தான் தோன்றுகிறது. வெற்றி.. வெற்றி.. வெற்றி.. இந்த மதுரை மாநாடும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. சில நல்லவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். வட தமிழ்நாட்டில் கூட்டம் வந்தது. தென் தமிழ்நாட்டில் கூட்டம் வருமா? என்றார்கள். நான் திருப்பி கேட்டேன். தம்பி வருவது யார் தெரியுமா? தாய்மார்களின் செல்லப்பிள்ளை.
எந்த தலைவருக்கும் இந்த கூட்டம் வராது
தமிழகமே அதிரும் தெரியுமா? வேறு எந்த தலைவருக்கும் மூன்று நாட்களுக்கு முன்பே குடும்பம் குடும்பமாய் கூட்டம் வராது. தலைவா உங்களுக்கு மட்டும் தான் வரும். நீங்கள் (விஜய்) இன்று அரசியல் ஆளுமை. நாளைய முதல்வர். உங்கள் பின்னால் நிற்பது பாசத்துக்குரிய கட்டுப்படும் ராணுவ படை. இன்றைய மாநாடு நாம் அடுத்து செய்யப்போகும் வேலைகளுக்கு வழிகாட்டியாக அமையும். தலைவரின் ஆணைகளை நாம் நிறைவேற்றுவோம்.
வேகமாக வேலை பார்க்க வேண்டும்
நாம் இன்னும் வேகமாக வேலை பார்க்க வேண்டும். வேர்வை நதியில் குளிக்க வேண்டும். மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். நம் லட்சியம் ஒன்று தான். இந்த மண்ணும், மக்களும் நல்ல முறையில் வாழ வேண்டும். அதற்கு நம் தலைவர் தான் நாட்டை ஆள வேன்டும். இந்த மாநாடு நம் வௌவான எதிர்காலத்துக்கு ஒரு அடித்தளத்தை அமைக்கும். இந்த மாநாட்டுக்காக அயராது உழைத்த கட்சியினர் அனைவருக்கும் நன்றி'' என்றார்.
