தொண்டர்கள் ஆர்ப்பரிப்புடன் தளபதி விஜய் மேடையேற மதுரையில் தவெக மாநாடு தொடங்கியது. சுமார் 2 லட்சம் தவெக தொண்டர்கள் மாநாட்டில் திரண்டுள்ளனர்.

Vijay TVK Conference Begins In Madurai: தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அதிகாலையில் இருந்தே தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் குவிந்தனர். அங்கு 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்திய நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் தவெக தலைவர் விஜய்யை காண வேண்டும் என தொண்டர்கள் காத்திருந்தனர்.

தவெக மாநாடு தொடக்கம்

சுமார் 2 லட்சம் தொண்டர்கள் கொளுத்தும் வெயிலில் காத்திருந்த நிலையில், சிலர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர். இதன்காரணமாக தவெக மாநாடு திட்டமிட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்பே தொடங்கப்பட்டது. மேள வாத்தியங்கள் முழங்க தவெக மாநாடு தொடங்கியது. விஜய்யின் தந்தை சந்திர சேகர், தாயார் ஷோபனா உள்பட தவெகவின் முக்கிய நிர்வாகிகள் விஜய்யின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

மாஸாக மேடையேறிய விஜய்

அப்போது விஜய் நடித்த திரையிசை பாடல்களும், தவெக பாடல்களும் ஒலிபரப்பட்டன. இதன்பிறகு தவெக மாநில மாநாடு சிறப்பு பாடல் ஒலிபரப்பப்பட்டது. ''உங்கள் விஜய் உங்கள் விஜய், உயிரென வரேன் நான்..'' என்று விஜய் பாடிய பாடல் பின்னணியில் ஓலிக்க தவெக தலைவர் விஜய் தவெக தொண்டர்கள் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் மேடையேறினார். மேடைக்கு வருகை தந்த விஜய், தொண்டர்களுக்கு இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். மேடையில் இருந்த தவெக நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.

ரேம்ப் வாக்கில் நடந்து சென்ற விஜய்

மேடையில் இருந்த தனது தாய், தந்தையிடம் விஜய் ஆசி பெற்றார். அப்போது விஜய்யின் தாய் ஷோபனா அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்து ஆசி வழங்கினார். இதன்பிறகு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த ரேம்ப் வாக்கில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி விஜய் கையசைததார். அப்போது தொண்டர்கள் தூக்கிய தவெக கட்சி துண்டுகளை விஜய் கேட்ச் பிடித்து விஜய் தனது தோளில் மாலைபோல் போட்டுக் கொண்டார். பின்பு விஜய் தங்களது கட்சியின் கொள்கை தலைவர்களான காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி, 40 அடி உயர கொடிக்கம்பத்தில் தவெக கொடியை ஏற்றினார்.