- Home
- Tamil Nadu News
- மதுரை
- 100 டிகிரி போட்டுத்தாக்கும் வெயில்! அடுத்தடுத்து மயங்கி விழுந்த தவெக தொண்டர்கள்! மருந்துகளுடன் பறந்த ட்ரோன்கள்!
100 டிகிரி போட்டுத்தாக்கும் வெயில்! அடுத்தடுத்து மயங்கி விழுந்த தவெக தொண்டர்கள்! மருந்துகளுடன் பறந்த ட்ரோன்கள்!
மதுரை தவெக மாநாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தவெக தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

TVK Volunteers Fainted Due To The Heat In The Madurai Conference
தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யட்ட நிலையில், இன்று அதிகாலை 4 மணி முதலே மாநாட்டுத் திடலில் தவெக தொண்டர்கள் குவிந்தனர். முதல் ஆளாக இருக்கைகளை பிடித்து விட வேண்டும் என அவர்கள் போட்டி போட்டனர். மதியம் 2 மணி வரை சுமார் 2 லட்சம் தவெக தொண்டர்கள் கூடியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெயிலால் மயங்கி விழுந்த தவெக தொண்டர்கள்
மாநாடு நடைபெறும் பாரப்பத்தியில் சுமார் 100 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. அதிகாலை முதலே இருப்பதால் வெயிலின் கோரத்தை சமாளிக்க முடியாமல் தவெக தொண்டர்கள் தடுமாறினார்கள். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், காலையிலேயே மாநாட்டுத் திடலுக்கு வந்திருந்த பல தொண்டர்கள் சோர்வடைந்து மயங்கி விழுந்தனர். குறிப்பாக அதிக நேரம் நின்றுகொண்டிருந்தவர்களும், போதிய அளவு தண்ணீர் அருந்தாதவர்களும் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர்.
மருத்துவ சிகிச்சை
மயக்கமடைந்தவர்களுக்கு உடனடியாக மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் கொடுத்து சிகிச்சை அளித்தனர். மேலும் மயங்கி விழுந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ட்ரோன்கள் மூலம் முதலுதவி சிகிச்சை பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
ட்ரோன்கள் மூலம் தண்ணீர் தெளிப்பு
வெயிலின் கோரப்பிடியை சமாளிக்க முடியாமல் தவெக தொண்டர்கள் மாநாட்டு திடலில் கீழே விரிக்கப்பட்டு இருந்த தரை விரிப்புகளை கிழித்து மூடிக் கொண்டனர். மேலும் அங்கு போடப்பட்டு இருந்த டேபிள்களுக்கு அடியிலும் நிழலுக்காக ஒதுங்கினார்கள். வெயிலின் கொடுமையை தொண்டர்கள் சமாளிக்கும் வகையில் ட்ரோன்கள் மூலம் தண்ணீர் பாட்டில்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டன. மேலும் ட்ரோன்கள் மூலம் தண்ணீரும் தெளிக்கப்பட்டது.
விஜய் பேச்சை கேட்காமல் குழந்தையுடன் வந்த பெண்கள்
மாநாட்டுக்கு முன்னதாக பெண்கள் கைக்குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவர் பேச்சை கேட்காமல் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்தனர். கூட்ட நெரிசல் மற்றும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளுடன் வந்தவர்கள் மாநாட்டுத் திடலுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.