- Home
- Tamil Nadu News
- மதுரை
- மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
மதுரை எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்தார். ஆரம்பத்தில் விபத்து என கருதப்பட்ட நிலையில், அவரது மகனின் புகாரால் நடத்தப்பட்ட விசாரணையில், காப்பீட்டு முறைகேட்டை மறைக்க சக ஊழியரே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது அம்பலமானது.

மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தின் 2வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ம் தேதி இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி (55) தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உதவி நிர்வாக அதிகாரி ராம கிருஷ்ணன் என்பவருக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கல்யாணி நம்பி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகன் திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் திலகர்திடல் காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. பெண் மேலாளரை பெட்ரோல் ஊற்றி ராமகிருஷ்ணன் எரித்தது தெரியவந்தது.
விபத்து தொடர்பான காப்பீடு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது ல்யாணி நம்பிக்கு தெரியவந்தது. இந்த முறைகேட்டில் அங்கு உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக ராமகிருஷ்ணனிடம், கல்யாணி நம்பி விசாரணை நடத்தி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமகிருஷ்ணன் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி அதனை பார்த்து அவரது மகனுக்கு செல்போன் மூலமாக பேசி காவல்துறையினரை வர சொல் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராம் உடனடியாக பெட்ரோலை கல்யாணி நம்பியின் மீது ஊற்றிவிட்டு கதவை பூட்டிவிட்டு வந்துள்ளார். கல்யாணி நம்பியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீப்பற்றியபோது ராமின் காலிலும் பெட்ரோல் பட்டுள்ளது. இதையடுத்து பெண் முதுநிலை மேலாளர் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு உதவி நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணணை போலீசார் கைது செய்தனர்.

