தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டிற்கு வந்த தொண்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரே உயிரிழந்தவர். இந்த சோகச் சம்பவம் மாநாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் மதுரை வளையங்குளத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு வந்த தொண்டர் ஒருவர், வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சோக சம்பவம்

சென்னையைச் சேர்ந்த தவெக தொண்டர் பிரபாகரன், கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பேருந்தில் புறப்பட்டு வந்துள்ளார். அவர் பயணித்த பேருந்து, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் அருகே வந்தபோது, பிரபாகரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் கட்சித் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடலுடன் தொடங்கிய மாநாடு

மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் நடைபெறும் தவெகவின் 2வது மாநில மாநாடு வெயில் காரணமாக திட்டமிட்டதைவிட ஒருமணி நேரத்துக்கு முன்பே தொடங்கப்பட்டது. மக்கள் மன்னன் எனத் தொடங்கும் சிறப்புப் பாடலுடன் ஆரம்பமானது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரேம்ப் வாக் செய்து தொண்டர்களைச் சந்தித்தார்.

100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்திய நிலையிலும் சுமார் 2 லட்சம் பேர் மாநாட்டுத் திடலில் திரண்டுள்ளனர். விஜய்யின் தந்தை சந்திர சேகர், தாயார் ஷோபனா உள்பட தவெகவின் முக்கிய நிர்வாகிகள் விஜய்யின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.